உலகக் கிண்ண காற்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி மீண்டும் இடம்பெறாது
உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை ஐரோப்பிய வெற்றியாளர்களான இத்தாலி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோட்டை விட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற 'பிளேஆஃப்' அரையிறுதிப் போட்டியில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் நார்த் மெசிடோனியாவிடம் தோல்வி கண்டது. கடைசி நிமிடத்தில் மெசிடோனியாவின் அந்த ஒரு கோல் அக்குழுவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டித் தந்தது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 1958ல் தொடங்கப் பட்டதிலிருந்து இத்தாலி, 2018ல் நடைபெற்ற இறுதிச் சுற்றில் தான் பங்கேற்கவில்லை. காற்பந்து ஜாம்பவான்களில் ஒன்றான இத்தாலிக்கு அது ஒரு பேரிடியாக அமைந்தது. இப்போது இரண்டாவது முறையாக அந்தப் பேரிடி அக்குழு வைத் தாக்கியுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இத்தாலி விறுவிறுப்புடன் ஆடி, கோல் போடும் 32 வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றில் ஒன்றைக்கூட கோலாக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற நார்த் மெசிடோனியா, மற்றொரு 'பிளேஆஃப்' அரையிறுதிப் போட்டியில் வென்ற போர்ச்சுகலுடன் பொருதும். அதில் வெற்றி பெறும் குழு, கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்கேற்கும்.
இந்த அதிர்ச்சித் தோல்வி பற்றி கருத்துரைத்த இத்தாலி யின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரோபர்ட்டோ மன்சினி, "இப்போதைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடந்த கோடைக்காலத்தில் ஐரோப்பிய வெற்றியாளரான போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். இப்போது மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியிருக்கிறோம்," என்றார்.

