கோலாலம்பூர்: சினோவாக் கொவிட்-19 தடுப்பூசியைப் போட் டுக்கொண்ட ஏறக்குறைய இரண்டு மில்லியன் பேர், வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
அப்படி போடாவிடில் தாங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான நிலையை இழக்க நேரிடும் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
"அண்மைய புள்ளிவிவரங்களின்படி, சினோவாக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட ஏறக்குறைய 2.09 மில்லியன் பேர் இன்னும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை," என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது கூறினார்.
"காலக்கெடு முடிவடையும்போது அவர்கள் தாங்கள் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையை இழக்க நேரிடும்," என்றும் அவர் எச்சரித்தார்.
"சிங்கப்பூர் சுகாதார அமைச்சருடனான தனது கலந்துரையாடலை அடுத்து, சினோவாக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, கூடுதல் தடுப்பூசியைப் போடாமல் உள்ளவர்களை முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்களாக நாடு கருதும்," என்றும் திரு கைரி மேலும் கூறினார்.
"எனவே, கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பலவிதத்திலும் சிறந்தது," என அறிவுறுத்தினார்.
வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவதை அகற்றுவதில் மலேசியா சிங்கப்பூரைப் பின்பற்றுமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "முகக்கவசம் அணிவது கட்டாயமாகப் பின்பற்றப்படும்," என்று கைரி கூறினார்.
"ஒருவர் வீட்டில் அல்லது தனிப்பட்ட பணியிடத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவதில்லை. உங்கள் சொந்த வாகனத்தில் முகக் கவசமின்றி பயணம் செய்யலாம். விளையாட்டு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், மேடை நிகழ்ச்சிகள், உணவருந்தும்போது முகக் கவசத்தை அகற்ற அனுமதிக்கப்படுகிறது," என அமைச்சர் பல விதிவிலக்குகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
"பெருமூளை வாதம் அல்லது மன இறுக்கம் போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கும் முகக்கவசம் அணிவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது," என்றார்.
மலேசியாவில் கடந்த வியாழனன்று 24,316 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 64 பேர் உயிரிழந்தனர். இதுவரை 34,664 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

