கியவ்: உக்ரேனின் தென்புறம் உள்ள பெர்டியான்ஸ்க் துறைமுக நகரில் நிறுத்தப்பட்டு இருந்த பெரிய ரஷ்ய கப்பலை அழித்துவிட்டதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்தன.
அந்தத் துறைமுக நகரை அண்மையில்தான் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து இருந்தன. அங்கு பல ரஷ்ய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியதாகவும் ரஷ்ய கப்பல் அழிக்கப்பட்டதாகவும் உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்தன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேன், போலந்து எல்லை அருகே இருக்கும் செஸ்சோவ் என்ற நகருக்கு நேற்று செல்லவிருந்தார்.
உக்ரேனின் ரஷ்ய படையெடுப்பை மேற்கு நாடுகள் உறுதியாக எதிர்க்கின்றன என்பதை தெரிவிக்கும் வகையில் அவருடைய இவ்வருகை அமைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து ஏறக்குறைய ஒரு மாத காலம் ஓடிவிட்டது. உக்ரேன் நிலவரம் ஐரோப்பிய நாடுகளைப் போரில் இழுத்துவிடக் கூடிய நிலையை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அது மூன்றாவது உலகப் போராக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்து இருக்கிறார்.
உக்ரேனில் அணுஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ரஷ்யா இதுவரை உறுதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உக்ரேன் முழுவதும் ரஷ்யா இடைவிடாமல் தாக்கி வருவதால் அந்த நாட்டின் மக்கள்தொகையில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள், ஏறக்குறைய 3.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக பல நாடுகளிலும் தஞ்சம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அவர்கள் போலந்து, ருமேனியா, சுலோவாகியா போன்ற பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு லட்சம் உக்ரேன் அகதிகளுக்குத் தான் இடமளிக்கத் தயார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.

