சியோல்: வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையைச் சோதித்து இருப்பதாக அந்நாட்டு ஊடகம் நேற்று கூறியது.
வடகொரியாவின் அணுஆயுத ஆற்றலை எடுத்துக்காட்டும் விதமாக அந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டு இருப்பதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.
அமெரிக்கா எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் எடுக்காதபடி இந்த ஏவுகணை எச்சரிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.
வடகொரியாவிடம் அணுஆயுத பலம் இருக்கிறது. அந்த நாடு முழுமையாக முதன்முதலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை இப்போது பரிசோதித்து இருக்கிறது என்று தகவல்கள் தெரிவித்தன.
இதுவரை வடகொரியா சோதித்து இருக்கும் ஏவுகணை அனைத்தையும்விட இந்த ஏவுகணை அதிக தூரம், அதிக உயரம் பாய்ந்து ஜப்பானுக்கு மேற்கே கடலில் விழுந்ததாக தகவல்கள் கூறின.
ஹுவாங்சோங்-17 என்று அந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. எந்தவொரு நாடும் இதுவரை இத்தகைய ஆகப் பெரிய திரவம் நிரப்பப்பட்ட ஏவுகணையைப் பாய்ச்சியது இல்லை என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

