வார்சா: உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று போலந்து சென்
றார்.
அங்கு அவர், உக்ரேனின் வெளியுறவு, தற்காப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அத்துறைகளின் அமெரிக்க அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
அமைச்சர்களுடனான பைடனின் சந்திப்பு ஏறத்தாழ 40 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக, அமைச்சர்களிடையே ஒரு மணி நேர பேச்சுவார்த்தை நடந்தது.
"அரசியல், பாதுகாப்பு கோணங்களில் நடைமுறைக்கேற்ற முடிவுகளில் கவனம் செலுத்தப்பட்டதாக," உக்ரேனின் டுவிட்டர் பதிவு கூறியது.
முன்னதாக, நேட்டோ கூட்டமைப்பு, ஜி-7, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களையும் பைடன் சந்தித்தார்.
இதற்கிடையே, ரஷ்யப் படைகள், பெலருஸ் எல்லைக்கு அருகில் உள்ள ஸ்லாவுட்டி நகரத்தைக் கைப்பற்றியுள்ளதாக கியவ் ஆளுநர் கூறியுள்ளார்.
அந்நகரத்தில் உக்ரேனின் செர்னோபில் நகரத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் வசிப்பதாகவும் அவர் சொன்னார்.
ரஷ்யப் படைகள் அந்நகரத்தின் மருத்துவமனைகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் மேயரைக் கடத்திவிட்டதாகவும் அவர் சொன்னார். ஆனால், ராய்ட்டர்ஸ் ஊடகத்தால் இத்தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை.
உக்ரேனில் மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தளபதி யாகோவ் ரெசான்ஸ்டெவ், உக்ரேனின் கெர்சான் பகுதியில் கொல்லப்பட்டதாக உக்ரேனின் தற்காப்புத் துறை கூறியுள்ளது.
உக்ரேன் மீதான ஒரு மாத கால போரில், இதுவரை ரஷ்ய ராணுவ அதிகாரிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

