விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

3 mins read
f4556fd4-ce0a-46de-bf2f-aeddccb7291e
-

நம்பிக்கையோடு செனகல்

ஜோகனஸ்பர்க்: உலகக் கிண்ணக் காற்பந்துக்கான ஆப்பிரிக்க தகுதிச் சுற்றின் ஆட்டமொன்றில் செனகலும் எகிப்தும் மோதின. செனகல் அபாரமாக விளையாடினாலும் 1-0 என்ற கோல்கணக்கில் எகிப்துதான் வெற்றி பெற்றது. சில வாரங்களுக்கு முன்பு, எகிப்தை வீழ்த்தி ஆப்பிரிக்கக் கிண்ணத்தை வென்ற செனகலுக்கு இது துரதிர்‌ஷ்டம் என்றே சொல்லவேண்டும்.

ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் எகிப்தின் சாலா உதைத்த பந்து கோல்கம்பத்தில் பட்டு திரும்பியது. ஆனால், செனகல் வீரர் சலியோ சிஸின் முட்டியில் பட்டு அந்தப் பந்து மீண்டும் கோல்வலைக்குள் சென்றுவிட்டது. செனகலின் சொந்த கோல், எகிப்திற்கு வெற்றியைத் தந்தது. ஆனால், அதன் பிறகு எகிப்தின் கோல் முயற்சி எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால், மிகுந்த ஆர்வத்துடன் விளையாடிய செனகல், பல கோல் முயற்சிகளை உருவாக்கியது. இது, இரண்டாவது சுற்று ஆட்டத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த கோல்கணக்கில் உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெறும் என்ற நம்பிக்கையோடு செனகல் உள்ளதைக் காட்டுவதாக இருந்தது.

மற்ற ஆட்டங்களின் முடிவுகள்: கேரூன் 0-1 அல்ஜீரியா, மாலி 0-1 துனீசியா, கானா 0-0 நைஜீரியா,

காங்கோ 1-1 மொராக்கோ.

சாதனையை நெருங்கும் ஜிருட்

மார்சே: பிரான்ஸ் காற்பந்து வீரர் ஒலிவர் ஜிருட், தம் அணிக்காக 47வது கோலைப் போட்டுள்ளார். ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டமொன்றில் அவர் இந்தக் கோலைப் போட்டார், அந்த அணிக்காக ஆக அதிக கோல் போட்ட ஹென்றியின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் ஐந்து கோல்கள் வேண்டும். ஜிருட்டின் அந்த கோலால், பிரான்ஸ் 2-1 என்ற கோல்கணக்கில் ஐவரி கோஸ்ட்டை வென்றது.

உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறாத ஐவரி கோஸ்ட், செவ்வாய்க்கிழமையன்று மற்றொரு நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

அர்ஜெண்டினா வெற்றிமுகம்

பியூனோஸ் ஏர்ஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துக்கான தென் அமெரிக்க தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெனிசுவேலாவிற்கு எதிராக மூன்று கோல்கள் போட்டு வெற்றி பெற்றது அர்ஜெண்டினா. ஏற்கெனவே உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றுவிட்டாலும் சற்றும் வேகம் குறையாமல் விளையாடியது அர்ஜென்டினா. ஆனால், முற்பாதி ஆட்டம் முடிய 10 நிமிடம் இருந்தபோதுதான் முதல் கோலே விழுந்தது. மாற்று ஆட்டக்காரராக இருந்த ஏஞ்சல் டி மரியா இரண்டாவது கோலையும் மெஸ்ஸி மூன்றாவது கோலையும் போட்டனர். இதையடுத்து, அர்ஜெண்டினாவின் தோல்வியில்லாப் பயணம் 30வது ஆட்டமாகத் தொடர்ந்தது.

காயம் காரணமாக ஸ்மித் விலகல்: ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு

கராச்சி: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதில் மிட்செல் ஸ்வெப்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மித் விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொடர்களில் விளையாடவில்லை. கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது.