வாஷிங்டன்: நான்காவது முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த அளவுக்குப் பயன் அளிக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், சில நாடுகள் அதனைப் போட்டுக்கொள்ள மக்களை அறிவுறுத்தி வருகின்றன.
இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்துள்ளது அமெரிக்கா. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில் நான்காவது தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிப்பது குறித்து அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அதுபற்றி விவரமறிந்த பலர் கூறுகின்றனர்.
வரும் வாரத்தில் உணவு, மருந்து நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஆனால், இதன் பலன் குறித்து மக்களிடம் எப்படி விளக்குவது, என்ன சொல்வது, உள்ளிட்டவை இத்திட்டத்தை செயல்படுத்துவதைச் சிக்கலாக்கி உள்ளன.
கிருமித்தொற்றின் அடுத்த அலை எப்போது தீவிரமடையும், அது எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்துத்தான் நான்காவது தடுப்பூசியின் தேவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இப்போதே தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
எனவே, அடுத்த சில மாதங்களில் அது தீவிரமடைந்தால், வயதானவர்களுக்கு இப்போதே நான்காவது தடுப்பூசி போடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றலாம் என்றும் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை, தொற்று தீவிரமடையவில்லை என்றால், தடுப்பூசிகளை வீணடித்ததாகிவிடும் என்ற கவலையும் அங்கு உள்ளது.

