நேப்பிடா: மியன்மாரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஓராண்டு ஆனதை ஒட்டியும் ஆயுதப் படைகள் தினத்தை முன்னிட்டும், அங்கு நேற்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
அப்போது, ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை அழிப்போம் என்று ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹிலாங் சொன்னார்.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதுமுதல் அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 1,700க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் கண்காணிப்புக் குழு கூறுகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த ராணுவ அணிவகுப்பில், பீரங்கிகள், டிரக் ஏவுகணைகள், குதிரைப் படை ஆகியவை கலந்துகொண்டன.
"ராணுவ ஆட்சியைக் கவிழ்க்க போராடுபவர்களுடன் இனி பேச்சுவார்த்தையெல்லாம் கிடையாது. கடைசி வரை அழிக்கப்படுவதுதான்," என்றார் மின் ஆங் ஹிலாங்.
இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக, 'அதிகார வேலைநிறுத்தத்திற்கு' அழைப்பு விடுத்துள்ளனர்.
மியன்மாருக்கு ரஷ்யா ஆயுதங்கள் வழங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் மியன்மார்மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

