விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
a21e3c93-5156-489b-9eb9-1c34c2afdfdc
-

பாபி சாதனையை சமன் செய்த ஹேரி

லண்டன்: அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில், பெனால்டி வாய்ப்பில் ஹேரி கேன் போட்ட கோலால் இங்கிலாந்து 2-1 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. இந்த கோல் மூலம், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் சர் பாபி சார்ல்டனின் 49 கோல்கள் சாதனையைச் சமன் செய்தார் ஹேரி. அந்த அணியில் ஆக அதிக கோல்கள் போட்ட வெய்ன் ரூனியின் சாதனையை எட்ட அவருக்கு இன்னும் நான்கு கோல்கள் வேண்டும்.

இங்கிலாந்தின் கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபோர்ட், எதிரணியின் கோல் முயற்சிகள் பலவற்றைத் தடுத்து விட்டார். ஆனால், 22வது நிமிடத்தில் அவரை ஏமாற்றி முன்னிலை பெற்றுவிட்டது சுவிட்சர்லாந்து. முற்பாதி ஆட்டத்தின் காயம்பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது இங்கிலாந்தின் லூக் ‌ஷா அதனைச் சமன் செய்தார். ஆட்டம் முடிய 12 நிமிடங்களே இருந்தபோது, பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் ஹேரி கேன்.

ஜெர்மனி தொடர் வெற்றி

பெர்லின்: அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் இஸ்ரேலுக்கு எதிரான பெனால்டி வாய்ப்பைக் கோலாக்க தவறினாலும் செல்சி வீரர்களின் கோல்களால் வெற்றி பெற்றது ஜெர்மனி. முற்பாதி ஆட்டத்திலேயே செல்சியின் கை ஹவெர்ட்சும் டிமோ வெர்னரும் ஆளுக்கொ‌‌ரு கோல் போட்டனர். அதன் பிறகு மேலும் கோல்கள் போடுவதற்கு ஜெர்மனி பெருமுயற்சி எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது ஜெர்மனி. நிர்வாகி ஹன்சி ஃபிளிக்கின் கீழ், ஜெர்மனியின் எட்டாவது தொடர் வெற்றி இது.

பெலருசிடம் வீழ்ந்தது இந்தியா

பஹ்ரேன்: பெலருசுக்கு எதிராக கோல் எதுவும் போடாத இந்திய காற்பந்து அணி மூன்று கோல்கள் வித்தியாசத்தில் தோற்றது. தன்னைவிட 10 இடங்கள் மேலே உள்ள பெலருசை முற்பாதி ஆட்டம் முழுவதும் கோல் போடவிடாமல் அபாரமாக தடுத்தாடியது இந்தியா.

ஆனால், அடுத்த 45 நிமிட ஆட்டத்தில் மீண்டெழுந்த பெலருஸ் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டது. ஏற்கெனவே பஹ்ரேனிடம் 2-1 எனத் தோற்ற இந்தியாவுக்கு இது, கடைசி அனைத்துலக நட்புமுறை ஆட்டமாகும்.

கிரிக்கெட்: இந்திய மகளிர் வெளியேற்றம்

வெலிங்டன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம், மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தும் வரை, இந்தியாவுக்கு நெருக்கடி நீடித்தது. 125 ஓட்டங்களுக்குத்தான் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தமுடிந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் விழத் தொடங்கியதால், தென்னாப்பிரிக்கா தடுமாறியது. கடைசி

2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், டு பிரீஸ், ஹர்மன்பிரீத் கௌரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்துவிட்டார். எனவே, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு ஓட்டம் எடுத்து தென்னாப்பிரிக்க வெற்றி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் பங்ளாதே‌‌ஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.