ரஷ்ய அரசாங்கத்தைக் கவிழ்த்து அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது தனது நோக்கமல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை பொறுப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை தமது உரையில் வெளிப்படுத்தியதை அடுத்து வெள்ளை மாளிகை நேற்று அதற்கு விளக்கம் அளித்தது.
உக்ரேனின் மீதான ரஷ்ய படையெடுப்பு, சுடுசொற்களால் மேலும் தீவிரம் அடையலாம் என்று பிரஞ்சு அதிபர் எமானுவெல் மக்ரோன் அக்கறை தெரிவித்தார். அத்துடன் திரு பைடனின் கருத்துகளையும் ரஷ்ய அரசாங்கம் கண்டித்துள்ளது.
ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த அமெரிக்காவுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். "ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டிற்கும் அதன் ஆட்சியை மாற்றவேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இல்லை. இது அந்தந்த நாட்டுக்கு குடிமக்களின் கையில் உள்ளது. இது ரஷ்ய மக்களின் தீர்மானத்தைப் பொறுத்துள்ளது," என்று திரு பிளிங்கன் கூறினார்.

