கொழும்பு: கடந்த பல ஆண்டுகள் இல்லாத அளவில் மிக மோசமான பொருளியல் நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கிறது.
செய்வதறியாது தவித்து வரும் இலங்கை அரசாங்கம் அண்டை நாடான இந்தியாவிடமிருந்து கூடுதலாக $1.36 பில்லியன் கடன் கேட்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியா ஏற்கெனவே 1 பில்லியன் அமெரிக்க டாலர் ($1.36 பில்லியன்) கடன் கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளைத் துவங்கியுள்ள வேளையில் இந்தியாவிடம் அந்நாடு நிதி உதவி நாடிஉள்ளது. பொருளியல் நெருக்கடி காரணமாக உணவு, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருள்களை இலங்கையால் இறக்குமதி செய்ய முடியவில்லை.
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சீனி, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இலங்கை இறக்குமதி செய்ய ஏதுவாக இந்தியா அந்நாட்டுக்குக் கடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கூடுதல் கடன் வழங்கு வது குறித்த விவரங்களை இரு
தரப்பினரும் வெளியிடவில்லை. கலந்துரையாடலின்போது பேசப்பட்டவை ரகசியம் காக்கப்படுகின்றன. பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் அவரது அண்ணனும் நாட்டின் பிரதமருமான மகிந்த ராஜபக்சேயும் காரணம் என்று இலங்கை மக்கள் குறைகூறுகின்றனர்.
இவ்விருவரும் பதவி விலக வேண்டும் எனக் கோரி அண்மைய சில நாள்களாக இலங்கையில் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்
பட்டுள்ளன.

