விமானப் பயணிகள் மலேசியா வருவதற்கு முன் சில அம்சங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்: அமைச்சர்

விமானப் பயணிகள் மலேசியா வருவதற்கு முன் சில அம்சங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்: அமைச்சர்

1 mins read
a3a558a7-c944-42df-a987-675ae9638582
படம்: இபிஏ -

வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் மலேசியா வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகள், அங்கு வருவதற்கு முன்பு சில அம்சங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.

"புறப்பாட்டிற்கு முன்பு, MySejahtera செயலியைப் பதிவிறக்கம் செய்து கணக்கு ஒன்றைப் பதிவுசெய்யவும்.

"டிராவல் சின்னத்தைத் தட்டி புறப்பாட்டிற்கு முந்தைய படிவம் ஒன்றை நிரப்பவும்.

"புறப்படுவதற்கு இரு நாள்களுக்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளவும். அதில் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளவும்," என்று திரு கைரி விவரித்தார்.

குறுகியகால பயணிகள், கொவிட்-19 பயணக் காப்புறுதியை வைத்திருக்க வேண்டும் என்று தம்முடைய அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் முடித்தவுடன், தடுப்பூசிச் சான்றிதழ் https://mysafetravel.gov.my/ எனும் இணையப் பக்கத்தில் சரிபார்க்கப்படலாம் என்றார் அவர்.

"நீங்கள் மலேசியா வந்திறங்கியவுடன், நடைமுறை எளிதாக இருக்கும். கடப்பிதழில் முத்திரை பதிக்கப்பட்டவுடன், உங்களது பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு நீங்கள் புறப்படலாம்.

"நீங்கள் மேலும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் முடிக்க வேண்டும். விமான நிலையத்திலோ மலேசியா வந்திறங்கிய 24 மணி நேரத்தில் ஏதாவது ஒரு தனியார் சுகாதார நிலையத்திலோ மேற்பார்வையின்கீழ் ஆர்டிகே-ஏஜி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," என்று திரு கைரி கூறினார்.