மலேசியாகினியின் மனு நிராகரிப்பு
கோலாலம்பூர்: வாசகர்களின் அவதூறு கருத்து தொடர்பாக, மலேசிய ஊடகமான மலேசியாகினிக்கு விதிக்கப்பட்ட 500,000 ரிங்கிட் அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரி ஊடக நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி ஜலேஹா யூசோஃப் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அமர்வு நிராகரித்தது.
மலேசியாகினி செய்தித்தளத்தின் பின்னூட்டத்தில் நீதித்துறையை அவமதிக்கும் விதமாக, வாசகர்கள் கருத்து பதிவிட்டிருந்தது தொடர்பில், சென்ற பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மன்னிப்புக் கேட்டார் வில் ஸ்மித்
நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.
"நான் எல்லோர் முன்னிலையிலும் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் கிறிஸ். நான் வரைமுறையை மீறி நடந்துகொண்டேன். நான் செய்தது தவறு. எனது மனைவி ஜடா மருத்துவ ரீதியாக எதிர்கொண்டு வரும் பாதிப்பு குறித்து நகைச்சுவை செய்வது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை," என்று தனது மன்னிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார் வில் ஸ்மித்.
ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். தம் மனைவி அதனை ரசிக்கவில்லை என்பதை உணர்ந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்துவிட்டார். 50 வயதாகும் ஜடா பிங்கெட், தாம் அலோபீசியா எனும் முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் அவரே முன்பு கூறியிருந்தார்.
மலேசிய பயண விதிமுறைகளைப் பின்பற்ற அமைச்சர் வேண்டுகோள்
கோலாலம்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் வரும் 1ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இல்லாமல் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று மலேசியா முன்பே அறிவித்து இருந்தது. இந்நிலையில், மலேசியா வருபவர்கள் அதற்கான பயண வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அதன் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் காணொளி ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
"பயணத்திற்கு முன்பு, மைஷெஜத்ரா செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் கணக்கு ஒன்றைத் தொடங்கி, பயண விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். புறப்படுவதற்கு, இரண்டு நாள்களுக்குள் பிசிஆர் பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மலேசியாவிற்கு வந்த பிறகு, 24 மணி நேரத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில், ஆர்டிகே பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்," என்றார். குறுகியகால வெளிநாட்டுப் பயணிகள் கொவிட்-19 பயணக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மக்களை ஈர்க்க சலுகைகள்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உயர்ந்து வரும் எரிபொருள், மளிகைப் பொருள்களின் விலையுயர்வைச் சமாளிக்கும் வகையிலான வரவுசெலவு திட்டத்தை அறிவித்து உள்ளது பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி. கிருமிப் பரவலால் கடனில் தத்தளிக்கும்போதும், எதிர்வரும் தேர்தலில் மக்களைக் கவரும் வகையில் ஆளுங்கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகக் கருதப்படுகிறது. பெட்ரோல் வரிகளை லிட்டருக்கு 22 காசுகள் குறைப்பது, ஓய்வூதியம் பெறுவோருக்கு A$250 ரொக்கப் பணம் வழங்குவது போன்றவை அதில் அடங்கும்.

