கோலாலம்பூர்: தம் மூன்று பிள்ளைகளும் தமது சம்மதமில்லாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை ரத்து செய்யக் கோரி லோ சியூ ஹாங் (படம்) எனும் இந்து சமயத்தைச் சார்ந்த பெண் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனு, மே மாதம் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த சீராய்வு மனுவில், பெர்லிஸ் மாநில மதமாற்ற பதிவாளர், பெர்லிஸ் இஸ்லாமிய-மலாய் சடங்கு மன்றம், பெர்லிஸ் மாநில சமயத் தலைவர் டாக்டர் முகமது அஸ்ரி சைனுல் அபிதின், பெர்லிஸ் மாநில அரசாங்கம் ஆகிய 4 தரப்புகளை லோ, பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
கணவரைப் பிரிந்து வாழும் லோ, தனது 3 பிள்ளைகளும் இந்துக்கள் எனவும் தமது அனுமதியின்றி பிள்ளைகளின் மதத்தை மாற்றுவதற்கு தனது முன்னாள் கணவர் நாகேஸ்வரனுக்கு உரிமையில்லை எனவும் அறிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மதம் மாறிய இரட்டை பெண் பிள்ளைகளுக்கு 14 வயது என்றும் ஆண் பிள்ளைக்கு 10 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார்

