லண்டன்: லண்டனில் முடக்கநிலை நடப்பில் இருந்தபோது, டவுனிங் ஸ்திரீட்டில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லம், அலுவலகங்களில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 பேருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பிரிட்டிஷ் போலிஸ் தெரிவித்துள்ளது.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை மீறி அவ்விடங்களில் நடத்தப்பட்ட 12 நிகழ்ச்சிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகி
றது.
அவற்றில் அரசாங்க அதிகாரிகள் சிலரும், ஒரு சில நிகழ்ச்சிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கலந்துகொண்டதாக முந்திய விசாரணை தெரிவித்தது.
அப்போதே, பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. மக்களுக்கும் அவர் மீதிருந்த நம்பிக்கை சரிந்தது.
இந்த விசாரணை தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, முதல்கட்டமாக 20 பேருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக நேற்று காவல்துறை தெரிவித்தது.
ஆனால் தண்டனையை எதிர்கொள்ளும் நபர்களின் பெயரையோ அல்லது அவர்கள் எந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் என்பதையோ காவல்துறை தெரிவிக்கவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாவும் மேலும் பலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அது கூறியது.
15க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கான அபராதம் 800 பவுண்டாகும் (1,420 வெள்ளி).
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்து உள்ளது.
"பிரதமர் அலுவலுகம் விதிமுறையை மீறியது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது," என்றார் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர்.
விதிமுறையை மீறியது உறுதி செய்யப்பட்டால் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

