ஆசியாவில கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் 100 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்த வட்டாரத்தில் ஒவ்வொரு இரண்டு நாள்களுக்கு ஒரு மில்லியன் பேருக்குக் கிருமி தொற்றுவதாக நிறுவனம் கணக்கிடுகிறது. உலகில் பதிவாகும் மொத்த கிருமித் தொற்றுச் சம்பவங்களில் 21 விழுக்காடு ஆசியாவில் ஏற்படுகின்றன.
தென் கொரியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் ஓமிக்ரான் அலை காரணத்தினால் அதிகப் பேருக்குக் கிருமி தொற்றியது.
தற்போது உலகில் பதிவாகும் ஆக அதிகச் சம்பவங்கள் தென் கொரியாவில் பதிவாகின்றன. உலகில் ஏற்படும் ஒவ்வொரு நான்கு தொற்றுச் சம்பவங்களில், ஒன்று அந்நாட்டில் ஏற்படுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. அங்கு ஒரு நாளைக்குத் தொற்றுப் பாதிப்பால் 300 பேர் உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் 43 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளான ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைவிட இது அதிகம்.
ஆசியாவில் இதுவரை 1,027,586 மில்லியன் பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
கொவிட்-19ஐ தடுக்க ஆஸ்திரேலியா அதன் எல்லைகள் மூடி, கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், ஓமிக்ரான் அலை அந்நாட்டை விட்டுவைக்கவில்லை. முடக்கநிலை மூலம் கிருமியைத் தடுக்கமுடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என உயிரியல் புள்ளியியல் துறை நிபுணர் குறிப்பிட்டார்.
ஓமிக்ரானுக்கு எதிராகத் தடுப்பூசிப் போடுவதும் அவ்வளவு பயனளிக்காது என்று கூறப்பட்டது. மற்ற வகை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஓமிக்ரான் மறுபடியும் பாதிக்கும் சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.


