இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய மகளிர்
வெலிங்டன்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை
157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ண இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. வெலிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்டிப்பிடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் தடுமாறியது. 37வது ஓவரிலேயே 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது வெஸ்ட் இண்டீஸ். ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக உலகக் கிண்ண இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
போர்ச்சுகல் முன்னேறியது
போர்டோ: நார்த் மேசடோனயோ காற்பந்துக் குழுவை தோற்கடித்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது போர்ச்சுகல். நேற்று நடந்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலின் இரண்டு கோல்களையும் போட்டவர் புருனோ ஃபெர்னான்டிஸ். ரொனால்டோவின் உதவியுடன் அவர் முதல் கோலை போட்டார். பிறகு டியேகோ ஜோட்டா உதைத்த பந்தை வலைக்குள் தள்ளி இரண்டாவது கோலை போட்டார். அரையிறுதியில் இத்தாலியை வெளியே அனுப்பிய மேசடோனியா அணி, நேற்று ஒருமுறைகூட எதிரணியின் கோல்வலைக்கு அருகில் செல்லவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற போர்ச்சுகல், தொடர்ந்து ஆறாவது முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் சுவீடனை 2-0 என்ற கோல்கணக்கில் வென்று போலந்தும் உலகக் கிண்ணக் காற்பந்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
செனகலிடம் மண்ணை கவ்விய எகிப்து
போர்டோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு முன்னேறியாக வேண்டும் என்ற முனைப்பில் செனகலும் எகிப்தும் தகுதிச் சுற்று ஆட்டத்தில் முட்டிமோதின. முதல் சுற்று ஆட்டத்தில் ஒரு கோல் முன்னிலையுடன் இருந்த எகிப்து, செனகலின் சொந்த மண்ணில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் ஒரு கோல்கூட போடவில்லை.
நான்காவது நிமிடத்தில் செனகல் போட்ட கோலைச் சமன் செய்யத் தடுமாறியது எகிப்து. எனவே, இந்த ஆட்டம் 1-0 என செனகலுக்குச் சாதமாக முடிந்தது. ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் 1-1 என இரு அணிகளும் சமநிலை கண்டன.
எனவே, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷுட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. எகிப்து தரப்பில் சாலா உட்பட நால்வர், பெனால்டி ஷுட்அவுட்டில் கோல் போட தவறிவிட்டனர். செனகலின் சாடியே மனே உட்பட மூவர் பந்தை வலைக்குள் அனுப்பியதைத் தொடர்ந்து 3-1 என அக்குழு வென்றது.
கேரூன், கானா, மொராக்கோ, துனீசியா ஆகிய ஆப்பிரிக்க அணிகளும் உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றுள்ளன.
அதிக புள்ளிகளுடன் பிரேசில் சாதனை
போர்டோ: தென்னமெரிக்க உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டத்தில், பொலிவியாவை 4 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிரேசில், 45 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரையில்லாத அளவுக்கு ஆக அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது பிரேசில். 2002ல் அர்ஜெண்டினா
43 புள்ளிகள் எடுத்திருந்தது. மற்றோர் ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் பாராகுவேவை வீழ்த்தி உலகக் கிண்ணக் காற்பந்தின் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது பெரு. ஜூன் மாதம் நடைபெறவுள்ள இச்சுற்றில் ஆஸ்திரேலியா அல்லது ஐக்கிய அரபு சிற்றரசு அணியை பெரு எதிர்கொள்ளும்.

