ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இவ்வாண்டு 19 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதோடு, அடுத்த மாதம் மேலும் 1.5 மில்லியன் தடுப்பூசிகள் காலாவதியாகிவிடும் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நன்கொடையாக அளிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகள் குறுகியகால கலாவதி தேதி கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தோனீசியா உள்ளிட்ட மேலும் பல வளரும் நாடுகளில் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக பணக்கார நாடுகள், வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசி நன்கொடை செய்கின்றன. ஆனால், அவை நீண்டகால காலவதி தேதி கொண்டதாக இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காலாவதியான தடுப்பூசிகளில் 97 விழுக்காடு நன்கொடையாக அளிக்கப்பட்டவை என்றார் இந்தோனீசியாவின் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர்.
தடுப்பூசி நன்கொடை பெறுவதை ஏப்ரல் மாதம் வரை நிறுத்தி வைப்பதாகவும் தடுப்பூசிகளின் காலாவதி நாள் குறைந்தது மூன்றில் இரண்டு பங்காவது இருக்கவேண்டும் என நன்கொடை அளிக்கும் நாடுகளுக்கு கூறப்படும் என்று வெளியுறவுத் துறை அதிகாரி சொன்னார். விரைவில் காலாவதியாகிவிடும் என்பதற்காக கிட்டத்தட்ட 100 மில்லியன் தடுப்பூசிகளை ஏழை நாடுகள் வேண்டாமென்று கூறியதாக யுனிசெஃப் கூறியது.

