கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் 10 மணி நேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இலங்கையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. மழை இல்லாததால், நீர்த் தேக்கங்கள் மூலமான மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மின்வெட்டு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நெருக்கடி நிலையில் மின்சாரத்தைச் சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் அடுத்த இரண்டு நாள்களுக்கு கையிருப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்காக,
மண்ணெண்ணெய் வாங்க
வரிசையில் காத்திருக்கும் பெண். படம்: ஏஎஃப்பி

