கராச்சி: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை நேற்று விலக்கிக்கொண்டது. அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியுடன் கைகோத்து இம்ரானுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து, நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது வரும் 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்த விவாதம் இன்று தொடங்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் சொன்னார்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

