கோலாலம்பூர்: மலேசியா இன்று முதல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்குத் தனது எல்லையைத் திறந்துவிடுகிறது. அதனையடுத்து அங்குள்ள விடுதி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தகங்கள் ஆள் பற்றாக்குறையாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று மலேசியா அறிவித்துள்ளது. அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவர்.
மலேசியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அங்குள்ள விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலாத்துறை சார்ந்த பல வர்த்தகங்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன.
உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்றால் மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கநிலை, பயணத் தடை போன்ற கட்டுப்பாடுகளால் மக்கள் நாட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சுற்றுலாத்துறை படுமோசமாக பாதிக்கப்பட்டன.
ஏராளமான நிறுவனங்கள் எவ்வித வருவாயுமின்றி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் இழுத்து மூடப்பட்டன.
பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தன. ஆனால், இப்போது அங்குள்ள சுற்றுலாத்துறை நிறுவனங்கள் ஆள்சேர்க்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்த மாதக் கடைசிக்குள், வட்டார மற்றும் அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள 'கிராண்ட் ஹயட்' விடுதியின் பொதுநிர்வாகி ஆலிவர் லெனாய்ர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாது உள்ளூச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விடுதிகள் அதற்கேற்ப பணியாளர்களை அதிகப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. அனைத்துலகப் பயணிகளை மலேசியாவுக்கு ஈர்ப்பதோடு உள்ளூர்ச் சுற்றுலாத்துறையையும் அரசாங்கம் சந்தைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலாத்துறை நிறுவனங்கள் விரும்புகின்றன.
ஜோகூர் பாருவில் உள்ள 'த நியூயார்க் ஹோட்டல்' விடுதியும் குறைவான ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இப்போது இங்கு வருகையாளர்களின் விகிதம் 48 விழுக்காடுதான்.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு விடுதியை தடங்கலின்றி இயக்க முடிகிறது. இனி வெளிநாட்டுப் பயணிகளின் வரத்து அதிகரிக்கும். எனவே, மேலும் அதிக ஊழியர்களை வேலையில் சேர்க்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த விடுதியின் பொது மேலாளர் குமாரி டான் அய் லீ, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்கள் முதல் தலைமைப் பணியாளர்கள் வரை அனைவரும் பலதரப்பட்ட பணிகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று அவர் கூறினார். அதேபோல் ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் ஆகியவையும் ஆள்சேர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

