பெய்ஜிங்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சீனத் தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.
காணொளி வாயிலாக நடைபெறவிருக்கும் இந்தச் சந்திப்புக் கூட்டம் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய - சீனத் தலைவர்களின் சந்திப்புக்கூட்டம் இதுவரை 22 முறை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா ஆகியவற்றிற்கு இடையே உறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த உதவும் என்று பேச்சாளர் வாங் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தின்போது ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயென் ஆகியோரை சீன நாட்டு அதிபர் ஸி ஜின்பிங், மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் சந்தித்துப் பேசுவார்கள் என்று திரு வாங் தெரிவித்தார்.
"உலக அமைதியை நிலைநாட்டுவதில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றன. வளர்ச்சியை ஊக்குவித்தல், மனித முன்னேற்றத்தை முன்னெடுப்பது போன்றவற்றில் முக்கிய பங்காற்றி வருகின்றன," என்றார் திரு வாங்.
"இப்போது நாம் எதிர்நோக்கும் அனைத்துலகச் சூழலில் நிலைத்தன்மையற்ற நிலையே காணப்படுகிறது. இதைச் சரிப்படுத்த பேச்சுவார்த்தை மூலம் இந்த இரு தரப்பினரும் கொள்கையளவிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
"அத்துடன் நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை, நன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் ஒருமித்த கருத்துடன் தீர்வுகாண பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்," என்றும் பெய்ஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் திரு வாங் தெரிவித்தார்.
சீனா - ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம், இரு தரப்புக்கும் இடையேயான கசப்பான உறவுகளின் காரணமாக பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

