ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இணைய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் நடத்தும் மின்னியல் தளங்களில் இடம்பெறும் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களை அகற்ற மறுக்கும் தனி மனிதர் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதமும் தடையும் விதிக்கும் திட்டத்தை அமல்படுத்த அந்நாடு பரிசீலித்து வருகிறது.
இணையம் வழி பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தோனீசிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, மின்மயமாக்கலை ஒருமுகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தோனீசியா புதிய மின்னிலக்கச் சட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
இந்தோனீசியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் தரவுகள் திருடப்பட்டதால் ஏராளமான அரசாங்க அமைப்புகளும் பெரிய நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
அத்துடன் தனிப்பட்ட தகவல்கள் திருடி விற்கப்படுவதால் எண்ணற்றோர் பாதிக்கப்படுகின்றனர்.
உலகம் முழுதும் தரவுத் திருட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் நாடுகள் திணறி வருகின்றன.
இது மோசமான நிலையை எட்டுவதைத் தவிர்க்கும் வகையில் இந்தோனீசியா, அதன் மின்னியல் தணிக்கைத் துறையை வலுப்படுத்தி வருகிறது.

