செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
689c41b6-3715-4e28-9b73-a2b9be851b6a
-

உக்ரேனை விட்டு அகதிகளாக

வெளியேறுவோர் அதிகரிப்பு

ஜெனிவா: ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறுவோர் எண்ணிக்கை விநாடிக்கு விநாடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 24 மணி நேரத்தில் 40,000 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். கடந்த ஒரு வார காலமாக ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் பேர் உக்ரேனை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 4,059,105 பேர் நாட்டை விட்டு மேற்கத்திய நாடுகளின் எல்லைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் 39,818 பேர் வெளியேறியுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

தாய்லாந்து: உச்சத்தில் தொற்று

பேங்காக்: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு விதிமுறைகளை தாய்லாந்து இன்று முதல் தளர்த்துகிறது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அங்கு தொற்றுப் பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று மட்டும் 27,560 புதிய தொற்றும் 85 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது. இன்று முதல் அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், பயணத்திற்கு முந்திய கொவிட்-19 சோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. சுற்றுலாப் பயணத்துறையை அதிகம் நம்பியிருக்கும் தாய்லாந்து, தனது எல்லையைத் திறந்துவிடுவதன் மூலம் பொருளியல் மீட்சியடைய வழிபிறக்கும் என்று நம்புகிறது. இந்நிலையில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனாவால் அங்கு நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்வது முக்கியம் என்று கொவிட்-19 சூழல் நிர்வாக மையத்தின் துணைப் பேச்சாளர் சுமனி வாச்சரிசின் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

'ரஷ்யாவுக்கான பொருளியல் தடை

டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும்'

வாஷிங்டன்: ரஷ்யா மீதான நிதித் தடையால் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது என்று அனைத்துலக நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அனைத்துலக ரீதியில் கையாளப்படும் பண நிதி கொள்கையிலும் பெரும் மாற்றம் நிகழலாம் என்று அனைத்துலக நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்க டாலர் உலக அளவில் முக்கியமான நாணயமாக தொடர்ந்து இருக்கும். இருப்பினும் படிப்படியாக அதன் ஆதிக்கம் குறையும். இப்போதே சில நாடுகள் வர்த்தகப் பரிமாற்றத்திற்கு எந்த நாணயத்தைப் பயன்படுத்துவது என்பதை முடிவுசெய்வதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன," என்றும் அவர் கூறியுள்ளார்.