கியவ்: உக்ரேனியர்கள் பலரின் சடலங்களைக் கொண்ட புதைக் குழி ஒன்றை அந்நாட்டு ராணும் தலைநகர் கியவ்வுக்கு அருகில் கண்டு
பிடித்தது.
புசோவா எனும் அந்தக் கிராமத்தில் அப்பாவி உக்ரேனியர்களை ரஷ்யப் படையினர் கொன்று குவித்ததாக உக்ரேன் குற்றம் சாட்டுகிறது.
ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கிராமத்தை தற்போது உக்ரேனிய படைகள் மீட்டுள்ளன.
பெட்ரோல் நிலையம் அருகில் புதைக்குழி ஒன்றில் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரேனின் டிமிடிரில்கா சமூகத்தின் தலைவர் தாராஸ் டிட்யிச் தெரிவித்தார்.
மாண்டோர் மொத்த எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
புதைக்குழியில் பல அப்பாவி உக்ரேனியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்து செய்தியாளர்களால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய காலகட்டத்தில் அந்தக் கிராமம் உட்பட அருகில் இருந்த மற்ற கிராமங்களும் நகரங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, குறைந்தது இரண்டு சடலங்கள் சாக்கடை வாயிற்புழைக்குள் இருப்பதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
ராணுவ சீருடை, சாதாரண ஆடைகள் ஆகியவற்றைக் கலந்து அணிந்திருந்த இருவர் கொல்லப்பட்டு சாக்கடை வாயிற்புழைக்குள் வீசப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
தூங்குவதற்குப் பயன்படுத்தும் பாய் ஒன்றுக்கு அடியில் ஒரு சடலம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாக்கடை வாயிற்புழைக்குள் எட்டிப் பார்த்த பெண் ஒருவர் கதறி அழுதார்.
மாண்டவர்களில் ஒருவர் தமது மகன் என்பதை அவர் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இரண்டு சடலங்களையும் வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, போரின் காரணமாக காயமடைந்த மக்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்குவது என்பதை கற்றுக்கொடுக்கும் வகையில் சிரியாவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் காணொளிகளை அனுப்பியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் போர் மூண்டது. அதில் பேரழிவை அந்த நாடு சந்தித்தது.
போரில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி வழங்குவதில் அனுபவம் வாய்ந்த சிரிய மீட்புப் பணியாளர்கள் உக்ரேனியர்களுக்கு உதவ தானாகவே முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.