நான்காவது இடத்தில் வலுவாக வீற்றிருக்கும் ஸ்பர்ஸ் குழு
பர்மிங்ஹம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 4-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு நேற்று முன்தினம் வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஆர்சனலும் மான்செஸ்டர் யுனைடெட்டும் தோல்வியைத் தழுவியதால் லீக் பட்டியலில் ஸ்பர்ஸ் குழு நான்காவது இடத்தில் வலுவாக வீற்றிருக்கிறது. நட்சத்திர வீரர் சொன் ஹியூங் மின் போட்ட மூன்று கோல்கள் ஸ்பர்ஸ் குழுவின் வெற்றிக்கு வித்திட்டது.
"மூன்று புள்ளிகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. சவால்மிக்க ஆட்டமாக இருந்தது," என்று ஆட்டத்துக்குப் பிறகு பிபிசி செய்தியாளர்களிடம் சொன் தெரிவித்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் லீக் பட்டியலில் வில்லா 12வது இடத்தில் வாடுகிறது.
சவுத்ஹேம்டனைப் பந்தாடிய செல்சி; டுக்கல் புகழாரம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் சவுத்ஹேம்டனை 6-0 எனும் கோல் கணக்கில் செல்சி நேற்று முன்தினம் பந்தாடியது. செல்சி ஆட்டக்காரர்களின் முனைப்பை அக்குழுவின் நிர்வாகி தாமஸ் டுக்கல் பாராட்டினார்.
அண்மையில் பிரென்ட்ஃபர்ட் குழுவிடம் 4-1 எனும் கோல் கணக்கில் செல்சி தோல்வி கண்டது. அதுமட்டுமல்லாது, சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டிடம் 3-1 எனும் கோல் கணக்கில் அது சுருண்டது.
இருப்பினும், சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மனந்தளராமல் விளையாடிய செல்சி, சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
ரசிகரின் கைபேசியை உடைத்த ரொனால்டோ வருத்தம்
மான்செஸ்டர்: கோபத்தில் ரசிகரின் கையில் இருந்த கைபேசியைக் கீழே தட்டிவிட்டு உடைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
இந்த ஆட்டத்துக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரசிகரின் கைபேசியை ரொனால்டோ உடைத்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரொனால்டோ இன்ஸ்டகிராம் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
"சிரமமான நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் கடினம். தற்போது நாங்கள் அத்தகைய சூழலில் இருக்கிறோம்.
"இருப்பினும், காற்பந்து ஆட்டக்காரர்கள் என்கிற முறையில் எப்பொழுதும் மரியாதையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். காற்பந்து மீது உயிரையே வைத்திருக்கும் இளையர்களுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
"கோபத்தில் நான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த ரசிகரை ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தை நேரில் பார்க்க அழைக்கிறேன்," என்றார் ரொனால்டோ.
ரொனால்டோவின் செயல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மான்செஸ்டர் யுனைடெட் தெரிவித்துள்ளது.

