'பட்டத்தை வென்றுவிடலாம் என கனவு காண வேண்டாம்'
லண்டன்: லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டிருந்தாலும் ஒரு புள்ளி அதிகம் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சிட்டி. இருப்பினும், பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுவிடலாம் என்று இப்போதே கனவு காணத் தொடங்கிவிடக்கூடாது என்று சிட்டியை எச்சரிக்கிறார் கெவின் டி பிரய்ன.
எட்டிஹாட் விளையாட்டரங்கில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் வெற்றியைத் தன்வசமாக்கிக் கொள்ளும் முனைப்பில் இரு குழுக்களும் ஆக்ரோஷத்துடன் மோதின.
கெவின் டி பிரய்ன போட்ட கோலை டியேகோ ஜோட்டாவும் கேப்ரியல் ஜேசுஸ் போட்ட கோலை சாடியோ மனேவும் சமன் செய்தனர்.
"இந்த ஆட்டத்தை யார் வெல்வார்களோ, அக்குழுவே பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால், குழுக்கள் அவ்வாறு நினைக்கவில்லை. இனி வரும் அனைத்து ஆட்டங்களையும் வெல்வது என்பது இரு குழுக்களுக்குமே மிகவும் கடினமான ஒன்று," என்றார்
டி பிரய்ன. இரு குழுக்களும் இன்னும் ஏழு ஆட்டங்கள் விளையாட வேண்டியுள்ளது.
"குத்துச்சண்டை போட்டியைபோல் இருந்தது. அற்புதமான ஆட்டம். இந்த ஆட்டத்தின் முடிவு காலத்திற்கும் நினைவில் இருக்கும்," என்றார் லிவர்பூல் நிர்வாகி கிளோப்.
"கிளோப்மீது எனக்கு மரியாதை உண்டு. லிவர்பூல், எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடும். ஆனால், வரும் சனிக்கிழமை ஆட்டத்தில் லிவர்பூலை வெல்ல முயற்சிப்பேன்," என்றார் சிட்டி நிர்வாகி கார்டியோலா.
வெம்பிளியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள எஃப்ஏ கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் மீண்டும் மோதவுள்ளதைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தப்பியது பிரண்ஃபர்ட்
லண்டன்: முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிட முயலும் வெஸ்ட் ஹேம் குழுவின் கனவைத் தகர்த்துவிட்டது பிரண்ஃபர்ட். அதே சமயம், 13வது இடத்திற்கு முன்னேறி இபிஎல்லில் இருந்து வெளியேறும் நிலையில் தப்பித்தும் விட்டது பிரண்ஃபர்ட். முற்பாதியில் இரு குழுக்களும் கோல் எதுவும் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு கோல்கள் போட்டு வெற்றி பெற்றுவிட்டது பிரண்ஃபர்ட்.
மற்ற ஆட்டங்களில், கிறிஸ்டல் பேலசை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது லெஸ்டர் சிட்டி, நார்விச்சிடம் 2-0 எனத் தோற்றது பர்ன்லி.
பட்டம் வென்றார் ஸ்கெஃப்ளர்
அகஸ்தா: கோல்ஃப் விளையாட்டின் மாஸ்டர்ஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ஸ்காட்டி ஸ்கெஃப்ளர் மூன்று புள்ளிகள் அதிகம் பெற்று பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தைவிட மூன்று புள்ளிகள் முன்னிலையில் இறுதிச் சுற்றில் களமிறங்கினார் ஸ்கெஃப்ளர். ஆனால், ஆட்டத்தின்போது, அது ஒன்றாக குறைந்தது. இருப்பினும், மீண்டும் ஒருமுறை பந்தைக் குழிக்குள் தள்ளி, ஒட்டுமொத்தமாக 278ன்கீழ் 10 புள்ளிகள் பெற்று பட்டத்தை வென்றார்.

