மணிலா: பிலிப்பீன்சை 'மெகி' புயல் உலுக்கியதில் குறைந்தது 25 பேர் மாண்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு இதுவே பிலிப்பீன்சை இவ்வாண்டு பதம் பார்த்துள்ள புயலாகும்.
புயல் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பீன்சின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரப் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்கு அடியில் புதையுண்டு கிடக்கும் பலரைக் காப்பாற்ற அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கரைபுரண்டோடும் வெள்ளத்திலிருந்து தப்பிக்க 1,300க்கும் அதிகமானோர் தாழ்வான பகுதிகளிலிருந்து மலைகள் போன்ற உயரமான இடங்களுக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
கனமழை, பலத்த காற்று காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
படகுகள் மூலம் கிராமவாசிகளை மீட்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றும் படங்களை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் இணையத்தில் பகிர்ந்துகொண்டனர்.
எதிர்பார்த்ததைவிட இந்தப் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக பிலிப்பீன்ஸ் வானிலை மையம் நேற்று கூறியது.
நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்ட கிராமவாசியை உயிருடன் மீட்ட பிலிப்பீன்ஸ் மீட்புப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி

