தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தும் தாய்லாந்து
பேங்காங்: தாய்லாந்து மக்கள் கொண்டாடும் சொங்க்ரான் புத்தாண்டு வரவிருப்பதால் அதற்கு முன்னதாகவே அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
கொண்டாட்டங்களின்போது பல ஒன்றுகூடல்கள் நிகழும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அதிகம் இருந்தால் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மளமளவென உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
அவ்வாறு நேர்ந்தால் நாட்டின் சுற்றுப்பயணத்துறையும் பொருளியலும் மீண்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சும் தாய்லாந்து அதிகாரிகள் அதைத் தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 500,000 முதியோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
போரின்போது உயிர்பிழைக்க கற்றுக்கொள்ளும் தைவானியர்கள்
தைப்பே: தைவானிய ராணுவம் முதல்முறையாக போரின்போது உயிர்பிழைப்பது எப்படி என்பதை விளக்கும் வழிகாட்டி நூல் ஒன்றை தன் நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்துள்ளது. தைவான் மீது சீனா போர் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் தைவானியர்களிடையே நிலவுகிறது. தைவானை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர இலக்கு கொண்டுள்ள சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தைவானுக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வெடிகுண்டு துளைக்க முடியாத இடங்களைத் திறன்பேசி மூலம் எவ்வாறு தேடுவது, போரின்போது தண்ணீர் மற்றும் உணவை எவ்வாறு பெற்றுக்கொள்வது, அவசரநிலை முதலுதவிச் சாதனங்களைக் கொண்ட பெட்டிகளை எவ்வாறு தயார் செய்வது ஆகியவற்றை தைவானிய ராணுவம் விநியோகித்திருக்கும் வழிகாட்டி நூல் விளக்குகிறது.
காவல்துறையில் இணைய இருக்கும் முன்னாள் போராளிகள்
மணிலா: முன்னாள் போராளிகளை காவல்துறையில் சேர்த்துவிட பிலிப்பீன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மோரோ இஸ்லாமிய விடுதலை அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் கூடிய விரைவில் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
இத்திட்டம் மூலம் கிட்டத்தட்ட 5,060 முன்னாள் போராளிகள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுக்கும்
நிக்கி லியாவ்
கோலாலம்பூர்: சட்டவிரோத கும்பலின் தலைவர் என்று சந்தேகிக்கப்படும் நிக்கி லியாவ் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மலேசியரான 34 வயது லியாவ் நேற்று ஷா அலாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவர் மக்காவில் நிகழ்ந்த மோசடிகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக அவர் மீது 26 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் இருவரை லியாவ் தாக்கினார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் இழப்பீடு கொடுத்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் லியோவுக்கு டத்தோஸ்ரீ பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், லியோவுக்கு வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ பட்டத்தை பாகாங் மாநில அரண்மனை மீட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று லியோவுக்கு எதிராகப் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் காவல்துறையிடம் சரணடைந்தார்.

