கொழும்பு: கடுமையான பொருளியல் நெருக்கடியால் திணறிவரும் இலங்கை, வெளிநாட்டுக் கடன் அடைப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய இலங்கையிடம் போதுமான பணம் இல்லாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"கடன்களை அடைப்பது முடியாத காரியமாகிவிட்டது. கடன் செலுத்தும் முறையை மாற்றி அமைத்து நாடு நொடித்துப் போகும் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும்," என்றார் அவர். அனைத்துலக பண நிதியத்திடமிருந்து கடன் வாங்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையே தமிழர்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் சிங்களப் புத்தாண்டும் நெருங்குவதால் உணவு, மருந்து இல்லாமல் சிரமப்படும் இலங்கை நாட்டவர்களுக்கு உதவும் வகையில் 16,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா கடந்த ஒரு வாரத்தில் கப்பல் மூலம் அனுப்பிவைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இலங்கைக்குக் கடன் வழங்க சீனா உறுதி அளித்திருப்பதாக சீனாவுக்கான இலங்கைத் தூதர் பலிதா கொஹோனா கூறியுள்ளார். சீனாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை எதிர்பார்க்கிறது. வாங்கிய கடன்களை அடைக்கவும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும் இந்தத் தொகை தேவைப்படுவதாக இலங்கை தெரிவித்தது. இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரத்துக்கு வாகனங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உரிமம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பவர்களை மடக்கிப் பிடிக்க இலங்கை காவல்
துறையினர் தீவெங்கும் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். இதில் 68 பேர் கைது செய்யப்பட்டு அதிக அளவிலான எரிபொருள் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளது.
பொருளியல் நெருக்கடிநிலையால் ஒட்டுமொத்த இலங்கை நிலைகுலைந்திருக்கும் வேளையில், மருந்து இல்லாமல் நோயாளிகள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று இலங்கை மக்கள் குமுறுகின்றனர்.
மருத்துவக் கட்டமைப்பு முடங்கிவிட்டதால் பல அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறை முன் இல்லாத அளவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத அளவுக்கு இருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

