கியவ்: ரஷ்யப் படைகள் ஒப்பந்தங்களை மீறி தாக்குதல்களை நடத்தி வருவதால், மக்கள் வெளியேறும் மனிதாபிமான பாதைகளை மூடுவதாக உக்ரேன் அறிவித்துள்ளது.
"மனிதாபிமான பாதைகள் ஆபத்து நிறைந்தனவாக உள்ளன. எனவே, அப்பாதைகளைத் திறப்பதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்," என்றார் உக்ரேனின் துணைப் பிரதமர் இர்யானா வெரேஷ்னக்.
மனிதாபிமான பாதைகளை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
"தெற்கு பகுதியில் உள்ள சபோரிஜியா பகுதியைச் சுற்றி, மக்கள் வெளியேறும் பேருந்துகளை ரஷ்யப் படைகள் தடுக்கின்றன. கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
"போர் சூழலில் இருந்து மக்கள் தப்பிக்க முற்படும்போது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தை ரஷ்ய ராணுவம் மீறுகிறது," என அவர் கூறினார்.
மற்றொரு பக்கம், பெருமளவிலான ரஷ்யப் படைகள், உக்ரேனின் தென்கிழக்கு டான்பாஸ் பகுதியை நோக்கி முன்னேறி வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள், உடனடியாக மேற்கு நோக்கி செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, உக்ரேனின் பிடியில் உள்ள கிரெம்ளின் ஆதரவாளரான தொழிலதிபர் விக்டர் மெட்வெட்சுக்கிற்குப் பதிலாக, தாம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் உக்ரேனியர்களை ரஷ்யா விடுவிக்கவேண்டும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புட்டினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகக் கருதப்படும் 67 வயது மெட்வெட்ச், உக்ரேனில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தப்பிக்க முயன்றது பயனற்று போனது.
இவற்றுக்கு இடையில், மரியபோலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சரணடைந்துள்ளனர். 36வது படைப்பிரிவைச் சேர்ந்த 1,026 உக்ரேனியப் படைவீரர்கள் தாமாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்ததாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

