மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தின் காலிறுதிப் போட்டி முடிவுற்ற பிறகு களநடுவர் ஒருவர் ரியால் மட்ரிட் நிர்வாகி கர்லோ அன்டிலோட்டியுடன் சேர்ந்து சிரித்ததை செல்சி நிர்வாகி டுக்கல் விமர்சித்துள்ளார்.
பிற்பாதி ஆட்டத்தின்போது மார்கோஸ் அலோன்சோ கையால் பந்தைக் கையாண்டதற்காக, காணொளி உதவி நடுவர் முறையின்கீழ் அவரது கோல் நிராகரிக்கப்பட்டது. இதில் நடுவர் நேராக சென்று காணொளிப் பதிவைக் காணாததற்காக ஏற்கெனவே டுக்கல் வருத்தத்தில் இருந்தபோது, நடுவர் சிரித்தது அவரை மேலும் எரிச்சலையடைய செய்திருக்கக் கூடும்.
"நடுவருக்கு நான் நன்றி சொல்ல சென்றபோது, எதிரணி நிர்வாகியுடன் சேர்ந்து அவர் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார்.
"ஒரு குழு கடைசி வரை போராடித் தோற்ற நேரத்தில், செய்யக்கூடிய செயல் அல்ல அது.
"முதல் சுற்றிலும் இன்றைய ஆட்டத்திலும் சில முடிவுகள் எங்களுக்கு எதிரானதாக அமைந்துவிட்டது," என்றார்.
செல்சியின் தோல்வி குறித்து பேசிய அவர், "நாங்கள் அபாரமாக விளையாடினோம். எனவே, தோற்றது குறித்து வருத்தப்பட ஒன்றும் இல்லை," என்றார்.
முதல் சுற்றின் இரண்டு கோல்கள் முன்னலையுடன் களமிறங்கிய மட்ரிட்டிற்கு எதிராக மளமளவென மூன்று கோல்கள் போட்டு முன்னிலை பெற்றது செல்சி.
அதன் பிறகு மட்ரிட்டின் ரோட்ரிகோ ஒரு கோல் போட ஆட்டம் 4-4 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் சமநிலை கண்டது. ஆனால், கூடுதல் நேரத்தின்போது மட்ரிட்டின் பென்சிமோ அடுத்த கோலைப் போட்டார். எனவே, 5-4 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் அரையிறுதிக்கு முன்னேறியது ரியால் மட்ரிட்.
மற்றோர் ஆட்டத்தில், பயர்ன் மியூனிக், வில்லா ரியால் மோதின. இந்த ஆட்டம் 1-1 என சமநிலை கண்டாலும், 1-2 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் மியூனிக்கிற்கு அதிர்ச்சி அளித்து வில்லா ரியால் அரையிறுதிக்கு முன்னேறியது.

