செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b5add31f-6f97-4b34-98cf-e3194bc97481
-

ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு

ஹாங்காங்: வரும் 21ஆம் தேதி முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்தார். இதனையடுத்து, உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும் நேரம் மாலை

6 மணிக்குப் பதிலாக, இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம்.

பொது இடங்களில் நான்கு பேர் ஒன்றுகூடலாம். வீடுகளில் நடத்தப்படும் ஒன்றுகூடல்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. 200 நாள்களுக்கும் மேலாக ஹாங்காங் வர்த்தகங்கள் முடங்கியிருந்தன.

8 பேர் மரணம்; ஓட்டுநருக்குச் சிறை

ஜோகூர் பாரு: சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள்மீது காரை மோதி, அவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட சேம் என்ற பெண்மீது எந்த குற்றமும் இல்லை என்று ஏற்கெனவே இரண்டு முறை விடுவிக்கப்பட்டிருந்தாலும் ஜோகூர் பாரு நீதிமன்றம் நேற்று அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. போதிய வெளிச்சமற்ற சாலையில் வேகமாக காரை ஓட்டியது சேம்மின் தவறு என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

2017 பிப்ரவரி 18ஆம் தேதியன்று அதிகாலை

3 மணியளவில் சேம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் பதின்மவயது சைக்கிளோட்டிகள் எட்டு பேர் மாண்டு விட்டனர். அவர்கள் பிரேக், விளக்கு இல்லாமல் மாற்றம் செய்யப்பட்ட சைக்கிள்களை ஓட்டியதாகக் கூறப்பட்டது.

கிராமத்தை எரித்த மியன்மார் ராணுவம்

நேப்பிடாவ்: மியன்மாரின் பின் எனும் கிராமத்தை ராணுவப் படையினர் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கிராமங்கள் அழிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

சென்ற ஆண்டு மியன்மாரில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, ராணுவத்தினர் கிட்டத்தட்ட 100 கிராமங்களை முற்றிலும் தீயிட்டு அழித்துவிட்டதாக சமூக ஆர்வலர் குழுவின் தரவுகள் கூறுகின்றன.