கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, சீனாவின் உதவியை பெற முயல்கிறது. ஆனால், இலங்கைக்கு உதவி செய்வதில் சீனா எச்சரிக்கை நிலையை கடைப்பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சீனாவும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், கிருமிப் பரவலுக்குப் பிறகு 'பெல்ட் அன்ட் ரோட்' திட்டத்திற்குச் செலவிடுவதில் கவனமாக உள்ளது.
மேலும், சீனா மற்ற நாடுகளுக்கு, கடன் கொடுத்து அவற்றைத் தன்னுடைய கடன் வலையில் சிக்கவைக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகவும் விரும்பவில்லை என்று கூறப்படு கிறது.
இலங்கையின் நிதியமைச்சர் அலி சாப்ரி புதன்கிழமையன்று இலங்கைக்கான சீன தூதர் குயி ஷென்ஹாங்கைச் சந்தித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசினார். அதன் பிறகு தூதரகப் பக்கத்தில் டுவிட் செய்திருந்த குயி , சிரமமான காலங்களில், சீனா எப்போதும் இலங்கையை ஆதரிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
தற்போதுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த 1 பில்லியன் டாலரும் சீன பொருட்களை வாங்குவதற்கு 1.5 பில்லியன் டாலர் கடனும் சீனாவிடம் கேட்டுள்ளது இலங்கை.
இந்த உதவிகள் வழங்கப்படுமா என்பது குறித்து சீனா எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், இலங்கைக்கு உதவ சீனா தயக்கம் காட்டும் என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கணேசன் விக்னராஜா.
"இலங்கைக்கு சீனா பணம் கொடுத்தால், பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தில் சேர்ந்துள்ள, இதே போன்ற நெருக்கடியில் உள்ள, மற்ற நாடுகளும் சீனாவிடம் கடன் கேட்கக்கூடும்," என்கிறார் அவர்.
ஆனால், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பி செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தும் இலங்கையின் முடிவு, அனைத்துலக உதவியின் ஒரு பகுதியாக சீனா, இலங்கைக்கு உதவுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அவர் சொன்னார்.
1948ஆம் ஆண்டு அடைந்த சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.