விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
a272b047-cb45-43e4-844b-7b6361fa9257
-

யூரோப்பா லீக்: அரையிறுதியில் வெஸ்ட் ஹேம், ஃபிராங்பர்ட்

பாரிஸ்: காற்பந்துக்கான யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா குழுவை காலிறுதியோடு வெளியேற்றியது ஃபிராங்பர்ட்.

ஃபிராங்பர்ட் வழக்கமான ஆட்ட நேரத்திலேயே மூன்று கோல்களைப் போட்டுவிட்டது. அதில் ஒன்றைகூட சமன் செய்யாத பார்சிலோனா, கூடுதல் நேரத்தின்போதுதான் இரண்டு கோல்களைப் போட்டது. எனவே 3-4 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது ஃபிராங்பர்ட்.

மற்றோர் ஆட்டத்தில் லயன் குழுவிற்கு அதிர்ச்சி அளித்தது வெஸ்ட்ஹேம். இக்குழுக்கள் மோதிய முதல் சுற்று ஆட்டம் 1-1 என சமன் கண்டிருந்த வேளையில், நேற்றைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 0-3 என்ற கோல்கணக்கில் வென்றது வெஸ்ட்ஹேம்.

எனவே, 1-4 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோப்பா லீக்கின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வெஸ்ட்ஹேம், ஃபிராங்பர்ட்டுடன் மோதவுள்ளது.

பர்ன்லி நிர்வாகி பதவிநீக்கம்

லண்டன்: இபிஎல் காற்பந்துத் தொடரில் பர்ன்லி குழுவிற்கு இன்னமும் எட்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அதன் நிர்வாகி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிமியர் லீக் குழு ஒன்றில் நீண்ட காலம் நிர்வாகியாக பணியாற்றிவர் என்ற பெருமை பதவிநீக்கப்பட்ட டைச்சிற்கு உண்டு. இவர் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பர்ன்லி குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்றார்.

பட்டியலில் 18வது இடத்தில் உள்ள பர்ன்லி, தனது கடைசி ஆட்டத்தில் கடைநிலையில் உள்ள நார்விச்சிடம் 2-0 எனத் தோற்றது. டைச்சைப் பதவிநீக்கும் முடிவு கடினமானது என்றாலும் மாற்றம் தேவைப்படுவதாக பர்ன்லி தலைவர் அலன் கூறினார்.

டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஜோ ரூட்

லண்டன்: டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் படுதோல்விகளைத் தொடர்ந்து, அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்து வந்தார் ரூட். அவரது தலைமையில்

64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி 27 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியா விடம் இழந்தது எனப் படுதோல்விகளைச் சந்தித்தது.இங்கிலாந்து கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

"குடும்பத்தினருடனும் எனக்கு நெருக்கமானவர்களு டனும் இதைப் பற்றி விவாதித்த பிறகு, நான் பதவி விலக சரியான நேரம் இது என்ற முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன்" என்றார் ரூட்.