துனிஸ்: எகிப்திலிருந்து டீசல் எரிபொருள் ஏந்திக்கொண்டு மால்டாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப்பலுக்கு நடுக்கடலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் கப்பலிலிருந்து டீசல் கசியும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கப்பலில் இருக்கும் பெருமளவிலான டீசல் கடலில் கசிந்தால் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரிடர் ஏற்படக்கூடும் என்று அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக துனிசிய கடற்பகுதிக்குள் நுழைய அக்கப்பல் நேற்று முன்தினம் மாலை அனுமதி கேட்டதாக அறியப்படுகிறது.
துனிசியக் கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது அக்கப்பலுக்குள் கடல்நீர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால் அதில் இருந்த ஏழு சிப்பந்திகளையும் துனிசிய அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர். சுற்றுச்சூழல் பேரிடர் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

