கியவ்: உக்ரேனின் மரியபோல் நகர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறும் ரஷ்யா, அங்கு எஞ்சியுள்ள உக்ரேன் வீரர்களை உடனடியாக சரணடையுமாறு எச்சரித்துள்ளது.
ஆனால், ரஷ்யா கெடு விதித்த கால நேரத்திற்குப் பிறகும், எஃகு தொழிற்சாலை ஒன்றில் தஞ்ச மடைந்திருந்த உக்ரேனிய வீரர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கைக்கு இணங்கியதாக தெரியவில்லை.
"சரணடையும் உக்ரேனிய வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் உண்டு," என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறியது.
கிட்டத்தட்ட ஆறு வார கால படையெடுப்பில் மரியபோலில் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா, அதனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ளது.
இந்நிலையில் இணையத்தள ஊடகம் ஒன்றிடம் பேசிய உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, "மரியபோலில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது வீரர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
"காயமடைந்த நிலையில், அவர்கள் தங்களைக் காப்பாற்றி கொள்ள போராடுகிறார்கள். மரியபோலில் மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது. அங்குள்ள அனைவரையும் ரஷ்யா வேண்டுமென்றே அழிக்கப் பார்க்கிறது," என்றார்.
"மரியபோலில் இருந்து எங்கள் வீரர்களை வெளியேற்றினால், அது அமைதி பேச்சுவார்த்தைக்கு முற்றுப் புள்ளியாக அமைந்துவிடும்," என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் அணுவாயுதத் தாக்குதலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, கியவ்விலும் ரஷ்யப் படைகள் தங்களது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது.
அங்கு வெடிமருந்து தொழிற்சாலை ஒன்றைத் தரைமட்டமாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மரியபோலில் கிட்டத்தட்ட 4,000 உக்ரேனிய வீரர்கள் மாண்டுவிட்டதாக ரஷ்ய உளவுப் படைத் தகவல்கள் கூறுகின்றன.

