செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a665f693-e345-4517-9831-d82818d500b8
-

நிர்வாகி கிளோப்: லிவர்பூல் குழுவின் ஆகச்சிறந்த ஆட்டம்

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிப் போட்டி, லிவர்பூலின் ஆகச் சிறந்த ஆட்டம் என்று கூறினார் அக்குழுவின் நிர்வாகி கிளோப். மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவிற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இவ்வாறு சொன்ன அவர், இது ஒரு வெற்றி அறிக்கை அல்ல என்பதையும் வலியுறுத்தினார்.

"மிகவும் பெருமையாக உள்ளது. அற்புதமான ஆட்டம். சிட்டிக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது எளிதானது அல்ல. உலகின் ஆக வலுவான குழுவை நாங்கள் வீழ்த்தி இருக்கிறோம். அது சிறப்பானதொரு தருணம்," என்றார் கிளோப்.

முற்பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்களையும் போட்டு வலுவான முன்னிலை பெற்றுவிட்டது. கெவின் டி பிரய்ன, கைல் வாக்கர் இல்லாமல் களமிறங்கிய சிட்டி, கோல் போடமுடியாமல் தடுமாறியது. பிற்பாதி ஆட்டத்தில் போராடத் தொடங்கிய சிட்டியால், இரண்டு கோல்கள் மட்டுமே போட முடிந்தது. எனவே 2-3 என்ற கோல்கணக்கில் வென்ற லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்பருவத்தில் ஏற்கெனவே லீக் கிண்ணத்தை வென்றுள்ள லிவர்பூல், சாம்பியன்ஸ் லீக் (அரையிறுதிக்குத் தகுதி), எஃப்ஏ கிண்ணம் (இறுதிக்குத் தகுதி), பிரிமியர் லீக் கிண்ணம் (பட்டியலில் இரண்டாவது இடம்) என நான்கு கிண்ணங்களையும் வெல்வதற்கான வாய்ப்புள்ளது.

ஒருவரை மட்டும் சாடுவது தவறு: போக்பாவிற்கு ஆதரவாக பேசிய ரங்னிக்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு வீரர் பால் போக்பாவை ரசிகர்கள் சாடியது பற்றி கருத்துரைத்த அக்குழுவின் தற்காலிக நிர்வாகி ரங்னிக், குழுவில் குறிப்பாக ஒருவரை மட்டும் சாடுவது தவறு என்று கூறியுள்ளார். நார்விச் குழுவிற்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, மேன்யூ ரசிகர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்பா, இக்காற்பந்துப் பருவத்தின் முடிவில் மேன்யூ குழுவைவிட்டுச் செல்ல முடிவெடுத்ததே ரசிகர்களின் கோபத்துக்குக் காரணம். இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்திலேயே போக்பாவிற்குப் பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் எனும் மூன்று கோல்கள் போட்டதைத் தொடர்ந்து, 3-2 என்ற கோல்கணக்கில் அக்குழு வெற்றி பெற்றது. ரொனால்டோவின் 60வது ஹாட்ரிக் கோல் இது.

"ரசிகர்களின் விரக்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு, விளையாட்டாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் அதே விரக்திதான். ஒரு குழுவாக அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே, குறிப்பாக ஒருவரை மட்டும் சாடுவது தவறு," என்றார் ரங்னிக்.

சிங்கப்பூர் வீரருக்கு 3வது இடம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நடுத்தர தூர ஓட்டப் பந்தய வீரரான 29 வயது ஜீவனே‌ஷ் சௌந்தரராஜா (படம்), சிங்கப்பூர் பொது விருது திடல், தடப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 1.500 மீட்டர் பந்தய தூரத்தை அவர்

4 நிமிடம் 00.99 வினாடிகளில் கடந்தார். இது அவரது தனிப்பட்ட ஆகச்சிறந்த நேரமாகும்.

சனிக்கிழமையன்று நடந்த இப்போட்டியில் பிலிப்பீன்ஸ் முதலிடத்தையும் மலேசியா இரண்டாம் இடத்தையும் பிடித்தது. சென்ற ஆண்டு வெள்ளி பதக்கம் வென்றிருந்த பிலிப்பீன்சின் மாசானோவை ஜீவனே‌ஷ் நான்காவது இடத்துக்குத் தள்ளினார். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகி வரும் அவருக்கு இந்த வெற்றி ஊக்குமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.