யங்கூன்: மியன்மாரில் கொண்டாடப்படும் பௌத்த புத்தாண்டை முன்னிட்டு 1,600 சிறைக் கைதிகளை அந்நாட்டின் ராணுவ ஆட்சிக் குழு விடுவித்துள்ளது.
ஆனால், அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களா அல்லது குற்றவாளிகளா என்பது குறிப்பிடப்படவில்லை.
அதே சமயம், அரசியல் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்பதை அறிந்து, அவர்களின் உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முன்னதாக, 42 வெளிநாட்டினர் உட்பட 1,619 கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என அரசு தொலைக்காட்சி ஒன்றில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, தங்களின் அன்பானவர்களை மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையுடன் சிறை வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர்.
"அரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிக்கப்படவில்லை, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டார்கள்," எனச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் சொன்னார்.

