ரொனால்டோ தம்பதியின் பிறந்த ஆண் குழந்தை மரணம்
மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நட்சத்திர வீரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டது குறித்து அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
இத்தம்பதிக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா, அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் அண்மையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார்.
பெண் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்த ரொனால்டோ, "எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. இந்த இழப்பில் நாங்கள் அனைவரும் துயரத்தில் இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் தனிமையை விரும்புகிறோம்," என்று பதிவிட்டுள்ளார்.
மிக நீளமான கண்ணாடிப் பாலம்
ஹனோய்: உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் வியட்நாமில் வரும் 30ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
பச் லாங் என்று அழைக்கப்படும் இந்த பாலம் 2,073.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் வருகிற 30ஆம் தேதி மறு ஒருங்கிணைப்பு தினக் கொண்டாட்டமும் நடைபெறவுள்ளது. சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஜான்ஷியாவில் 1,410.7 அடி நீளமுள்ள கண்ணாடிப் பாலம்தான் தற்போது உலகின் நீளமான கண்ணாடிப் பாலமாக உள்ளது.
பாகிஸ்தானில் நிதி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்
இஸ்லாமாபாத்: உக்ரேன், ரஷ்யா போர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி விநியோக பற்றாக்குறை காரணமாக கடந்த 9 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானின் எரிசக்தி கொள்முதல் செலவு 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நிலக்கரி, இயற்கை எரிவாயு என மின் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வாங்கும் அளவு போதிய நிதியின்மையால் 3,500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆஃப்லைன் உற்பத்தி முறையிலும் இதே குளறுபடிகள் நீடிப்பதாகவும் புதிய அமைச்சரவையின் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ
7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தைவானில் தொற்று அதிகரிப்பு
தைப்பே: தைவானில் நேற்று 1,390 பேரைக் கிருமி தொற்றியது. இம்மாத இறுதிக்குள் அன்றாட தொற்றுச் சம்பவங்கள் 1,000க்கும் மேல் பதிவாகும் என்று அதன் சுகாதார அமைச்சர் சென்ற வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, நியூசிலாந்தைப் போல் கிருமித்தொற்றுக்கு மத்தியில் வாழத் தொடங்குவதா அல்லது ஹாங்காங்கைப் போல் கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்க போராடுவதா என்பதைப் பற்றி தைவான் விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

