இஸ்லாமாபாத்: இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரா எனும் ஆடவர், பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
48 வயது பிரியந்த குமாரா பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மத நிந்தனை செய்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இலங்கையுடனான உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதைய பிரதமர் இம்ரான் கான் இச்சம்பவத்தை 'அவமானகரமான நாள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
குற்றம்சாட்டபட்ட 88 பேரில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

