அலோர் ஸ்டார்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள குடிநுழைவு தடுப்புக் காவல் நிலையம் நெரிசலாக இருந்ததால் அங்கு கலவரம் மூண்டிருக்கலாம் என்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தக் கலவரத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ரொஹிங்யா மக்கள் தப்பியோடினர்.
சுங்கை பக்காப் தற்காலிகத் தடுப்புக் காவல் நிலையத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கெடா மாநில காவல்துறை அதிகாரி வான் ஹசான் அகமது கூறியுள்ளார்.
குற்றவியல் சட்டப் பிரிவுகள் 147, 224 ஆகியவற்றுக்குக்கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார். கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, கலவரத்தில் ஈடுபடுவது ஆகிய செயல்களை அந்த இரு பிரிவுகளும் குறிக்கின்றன.
சுங்கை பக்காப் காவல் நிலையம் பினாங்கு, கெடா மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. அங்கு மூண்ட கலவரத்தால் சுமார் 528 ரொஹிங்யா மக்கள் நேற்று முன்தினம் காலையில் தப்பி ஓடினர்.
அவர்களில் விரைவுச் சாலையைக் கடக்க முயன்ற ஆறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள், ஒருவர் சிறுவன், மற்றொருவர் சிறுமி.
ஆகக் கடைசி நிலவரப்படி தப்பியோடிய 357 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கலவரம் மூண்டபோது 23 குடிநுழைவுப் பிரிவு அதிகாரிகள் தடுப்புக் காவல் நிலையத்தில் இருந்ததாக திரு வான் ஹசான் தெரிவித்தார்.
அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
சிறிய இடத்தில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனதாகவும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் திரு வான் ஹசான் குறிப்பிட்டார்.
இன்னும் பிடிபடாதோரைக் கண்டுபிடிக்க பினாங்கு காவல்துறையுடன் இணைந்து தாங்கள் தேடல் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.

