மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகும் எரிக் டென் ஹாக்
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியின் பயிற்றுவிப்பாளரான எரிக் டென் ஹாக்கைத் (படம்) தனது புதிய நிர்வாகியாக நியமித்துள்ளது. டென் ஹாக் அடுத்த பருவம் பதவியேற்பார்.
யுனைடெட் சரியாக விளையாடாததால் முன்னைய நிர்வாகி ஒலே குனார் சொல்ஷியார் சென்ற ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு தற்காலிக நிர்வாகி ரால்ஃப் ராக்னிக்கின்கீழ் அணியின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது.
பெரும் சரிவைச் சரிசெய்யும் பொறுப்பை இப்போது டென் ஹாக் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வெளுத்துக்கட்டிய ஆர்சனல்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் செல்சி காற்பந்து அணியை 4-2 எனும் கோல் கணக்கில் வென்று அசத்தியுள்ளது ஆர்சனல் அணி. கடந்த சில ஆட்டங்களில் சரிவைச் சந்தித்த ஆர்சனல் இந்த ஆட்டத்தில் அபாரமாக மீண்டு வந்தது.
பிரிமியர் லிக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கும் அணிகள் அடுத்த பருவத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும். அதற்கான போட்டியில் பின்தங்கிப் போன ஆர்சனலுக்கு இந்த வெற்றி மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளது.
பொதுவாக இந்தப் பருவத்தில் ஆர்சனலின் விளையாட்டு மேம்பட்டுள்ளது. எனினும், மீண்டும் இதர அணிகள் பார்த்து அஞ்சும் ஒன்றாக உருவெடுக்க அது தொடர்ந்து சிறப்பாக ஆடுவது அவசியம்.
மீண்டும் முதலிடத்தில் சிட்டி
மான்செஸ்டர்: மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டனை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
முன்னதாக இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவர்பூல், 4-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வறுத்தெடுத்து முதலிடத்திற்குச் சென்றது. அதனால் பிரைட்டனை வெல்லவேண்டிய கட்டாயத்தில் சிட்டி இருந்தது. அதற்கு ஏற்றவாறு காரியத்தைக் கச்சிதமாக முடித்தது சிட்டி.
இந்த லீக் பருவம் முடிவதற்கு சிட்டி, லிவர்பூல் இரண்டுக்கும் ஆறே ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இரண்டுக்கும் இடையே ஒரு புள்ளி வித்தியாசம்தான். லீக் விருதை வெல்லும் வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் சரிசமமாக உள்ளன. கடந்த சில வாரங்களாக அபாரமாக ஆடிவருகிறது லிவர்பூல்.

