கியவ்: உக்ரேனின் கிழக்குப் பகுதி யிலும் மற்ற இடங்களிலும் ரஷ்யப் படையினரின் முன்னேற்றம் தற்காலிகமானதுதான் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
"நாட்டின் தெற்கு, கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யப் படையினர் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றனர். படைகளைக் குவிப்பது மட்டு மல்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடமாட்டத்தைத் தொடங்கவும் அவர்கள் முயல்கின்றனர்.
"எங்களை வெற்றிகொள்ள இதுபோன்ற எந்த முயற்சிகளும் ரஷ்யாவிற்கு உதவாது. ரஷ்யப் படையினர், உக்ரேனைவிட்டு வெளியேற்றப்படுவதைத்தான் தாமதப்படுத்த முடியும்," என்றார் அவர்.
ஆனால், இப்போரில் இன்னமும் ரஷ்யா வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
படையெடுப்பின் ஆரம்பத்தில் ரஷ்ய ராணுவத்திற்கு இருந்த பிரச்சினைகளை அந்நாடு சரிசெய்ய தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டோன்பாஸ் மற்றும் தெற்கு உக்ரேன் பகுதிகளை தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிடுவதாக ரஷ்ய ராணுவத்தின் துணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ரஷ்யா ஏற்கெனவே கிரிமியாவை கைப்பற்றியுள்ள நிலையில் தெற்கு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றால், அது கியவ் மீதான புதிய தாக்குதலுக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே, மரியபோலின் சாலைகளிலும் இடிபாடுகளிலும் கிடக்கும் சடலங்களை தன்னார்வல குழு அப்புறப்படுத்தி வருகின்றது.
மரியபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைக்குழியில் ஏறத்தாழ 3,000 முதல் 9,000 மக்கள், ரஷ்யப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேக்ஸர் தொழில்நுட்பத்தின் உதவியோடு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்புகளை ஆராய்ந்து, மரியபோல் நகர மன்றம், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், புச்சா பகுதியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய புதைக்குழியை விடவும் 20 மடங்கு பெரிய புதைக்குழி மன்ஹஷ் பகுதியில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

