செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8dbecf0e-5f3e-4012-84ff-4cf8b8743aa8
-

பரிசோதனை நடைமுறைகளைத் தளர்த்துகிறது தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்து சென்றடைந்தவுடன் வெளிநாட்டுப் பயணிகளுக்குச் செய்யப்படும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடைமுறையைக் கைவிடுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, கட்டாய பிசிஆர் பரிசோதனைக்குப் பதிலாக, இனி பயணிகள் சுயமாக ஆன்டிஜென் பரிசோதனை செய்துகொள்ளவார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான இந்நடைமுறை வரும் 1ஆம் தேதி முதல் பின்பற்றப்படும் என அந்நாட்டின் கொவிட்-19 பணிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சொன்னார். எனவே, பயணிகள் இனி விமான நிலையத்தில் ஒருநாள் இரவு தங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.

அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளிடம், தொற்று இல்லை என்பதற்கான பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் தாக்குதல்: தீவிரவாதியை கைது செய்தது தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதியான அப்துல் ஹமீதை தலிபான் படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வடக்கு நகரமான மஸர்-இ-சிரிஃப்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின்மீது நடத்தப்பட்ட அத்தாக்குதலில்

12 பேர் மாண்டுவிட்டனர். 58 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது.

'கொவிட்-19 மாத்திரைகள் சிறந்தது'

வா‌ஷிங்டன்: ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 மாத்திரை, கடும் நோய் அபாயம் அதிகமுள்ளவர்களுக்கு ஆகச் சிறந்தது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. மருத்துவமனை சிகிச்சைக்கான தேவையை பேக்ஸ்லோவிட் எனும் அந்த மாத்திரை 85 விழுக்காடு குறைப்பதாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட அந்தப் பரிசோதனைகள் காட்டின. எனினும் இந்த மாத்திரையை, கிருமி தொற்றிய சில நாள்களிலேயே உட்கொள்ள வேண்டும், வேறு மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடும்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பது போன்ற சவால்கள் உள்ளதாகவும் நிறுவனம் கூறியது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

யங்கூன்: ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களுடன் நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மியன்மாரின் ராணுவ ஆட்சிக்குக் குழுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த, ராணுவப் படை போராடி வரும் நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.