லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவை இபிஎல் பட்டம் வெல்லும் வகையில் தயார் செய்ய மூன்று ஆண்டுகள் பிடிக்கக்கூடும் என்று அக்குழுவின் முன்னாள் வீரர் வெய்ன் ரூனி கூறியுள்ளார்.
அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவின் நிர்வாகியாக இருந்த எரிக் தென் ஹேக் (படம்), ஓரிரு நாள்களுக்கு முன்னர் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் மேன்யூ நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதுபற்றி பேசிய மேன்யூவின் முன்னாள் வீரர் ரூனி, குழுவை மீண்டும் கட்டியெழுப்ப புதிய நிர்வாகிக்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்ற அவர், ரசிகர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் சொன்னார்.
பிரிமியர் லீக் தொடரில் மேன்யூ விற்கு இன்னும் ஐந்து ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2012-13ஆம் ஆண்டு பருவத்தில்தான் மேன்யூ கடைசியாக இபிஎல் பட்டம் வென்றது.
இந்நிலையில், குழுவை மீட்டெடுக்கும் முக்கிய பணி புதிய நிர்வாகியான ஹேக்கிற்கு உள்ளது.

