வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் தம்முடைய உயிரை மாய்த்துக்கொண்டார்.
வாஷிங்டனின் கனெக்டிகட் அவென்யூ பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தின் மேல் தளத்தில் நின்றுகொண்டு அவர் தாறுமாறாக துப்பாக்கியால் சுட்டார். ஏறத்தாழ 20 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த 12 வயது சிறுமி உட்பட, மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் 23 வயது ரேமண்ட் ஸ்பென்சர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருடைய வீட்டைச் சோதனை செய்ததாகவும் அப்போது அதிநவீன ஸ்னைப்பர் எனும் குறிபார்த்து சுடும் துப்பாக்கியைக் கண்டறிந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பரவிய காணொளி, துப்பாக்கிச் சூட்டின்போது நேரடியாக ஒளிபரப்பானதா அல்லது அதன் பிறகு பதிவேற்றம் செய்யப்பட்டதா என ஆராயப்படுகிறது.

