மும்பை: காற்பந்துப் போட்டிகளில் நடப்பதைப் போல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், இரண்டாவதாக பந்தடித்துக் கொண்டிருந்த டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது ஒபட் மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளிலும் சிக்சர் அடித்தார் ரோவ்மன் பவல்.
3வது பந்து பந்தடிப்பாளரின் இடுப்புக்குச் சற்று மேலே வீசப்பட்டதால், டெல்லி அணி நடுவர்களிடம் 'நோ பால்' கேட்டது.
ஆனால் நடுவர்கள் 'நோ பால்' வழங்க மறுத்துவிட்டார்கள். 3வது நடுவரிடம் இதுகுறித்து விசாரிக்கவும் இல்லை.
இதனால் எரிச்சல் அடைந்த ரிஷப் பந்த், களத்தில் இருந்த பவல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். பிறகு உதவிப் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை மைதானத்துக்கு உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள்.
எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த பட்லர் இதுபற்றி ரிஷப் பந்திடம் காரசாரமாக விவாதம் செய்தார்.
இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ஆம்ரே திரும்பியவுடன் வழக்கம் போல் ஆட்டம் நடந்தது. கடைசி 3 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, கடைசிப் பந்தில் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் பவல்.
இந்த ஆட்டத்தை, ராஜஸ்தான் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

