ஷாங்காய்: கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஷாங்காய் அதிகாரிகள் சில வீடுகளுக்கு வெளியே தடை அமைத்துள்ளது, மக்களிடையே எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு வீட்டு வாயிலை அடைத்து அவர்கள் தடைகளை அமைத்தனர். சில இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு 2 மீட்டர் உயரத்திற்குத் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.
"வீட்டு விலங்குகளை அடைத்து வைப்பது போல் உலோக தடுப்புகளைப் போடுவது, வீட்டிற்குள் இருப்பவர்களின் உரிமைகளை அவமரியாதை செய்வதாக உள்ளது," என்று சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
தீ விபத்து சமயத்தில் இது ஆபத்தானதாக இருக்கும் என்று மற்றொருவர் கூறியிருந்தார்.
குடியிருப்பாளர்கள் சிலர் தங்களது மாடியில் இருந்து, தடுப்பு வேலிகளை அமைப்பவர்களை நோக்கிக் கூச்சலிடுவது, ஒரு சில இடங்களில் மக்கள் தடுப்பு வேலிகளைப் பிடுங்க முயல்வது போன்ற காணொளிகளும் சமூக ஊடகத்தில் வலம் வருகின்றன.
அதிகாரிகளின் இந்நடவடிக்கை, மக்களிடையே எரிச்சலையும் புகார்களையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், ஷாங்காயில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் 39 பேர் தொற்றுக்கு மாண்டுவிட்டனர். இதையடுத்து, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, அங்கு மாண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 87 ஆனது.
பெய்ஜிங்கில் கிருமிப் பரவல்
இதற்கிடையே, பெய்ஜிங்கிலும் கிருமி பரவத் தொடங்கியுள்ளது. வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் அங்கு 20 தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் சென்ற ஒரு வாரமாக கிருமிப் பரவுகிறது என்பது கண்டறியப்பட்டதாக பெய்ஜிங்கின் சுகாதார அதிகாரி ஒருவர் சொன்னார்.
தொற்றுக்கு ஆளானவர்கள் பல இடங்களுக்குச் சென்றுள்ளதால், வரும் நாள்களில், தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெய்ஜிங்கிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

