விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
7e964a64-fcef-46cd-998c-f0ea2adea54a
-

நான்காவது இடத்திற்கு ஆர்வம் காட்டும் டோட்டன்ஹம், ஆர்சனல்

லண்டன்: டோட்டன்ஹம் காற்பந்துக் குழுவும் பிரெண்ட்ஃபர்ட் குழுவும் மோதிய ஆட்டம், கோல் எதுவும் இல்லாமல் சமன் கண்டது. இது, சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடருக்குத் தகுதி பெற வேண்டும் என்ற டோட்டன்ஹம் குழுவின் கனவில் விழுந்த பேரிடியாகும்.

டோட்டன்ஹம்மின் முன்னாள் வீரரும் தற்போது பிரெண்ட்ஃபர்ட் குழுவிற்காக விளையாடும் கிறிஸ்டியன் எரிக்சன், தமது முன்னாள் குழுவிற்குக் கடும் சவாலாக இருந்தார். பிற்பாதி ஆட்டத்தில் பிரெண்ட்ஃபர்ட் கோல் போடுவதற்கான சில வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவற்றால் பலனில்லை.

ஏற்கெனவே பிரைட்டனிடம் 1-0 கோல்கணக்கில் அடைந்த தோல்வியும் இந்த ஆட்டத்தை வெல்ல முடியாமல் போனதும் டோட்டன்ஹம்மிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

நேற்று நடந்த மற்றோர் ஆட்டத்தில் மேன்யூவை 1-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய ஆர்சனல், பட்டியலில் டோட்டன்ஹம்மை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இக்குழுக்களுக்கு இடையே இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்களை வென்று, நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கு குழுக்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

12 புள்ளி முன்னிலை; ஜெர்மானிய லீக் பட்டத்தை வென்றது பயர்ன் மியூனிக்

மியூனிக்: ஜெர்மானிய லீக் காற்பந்து பட்டத்தை வென்றது பயர்ன் மியூனிக். அதன் பரம எதிரியான பொரு‌ஷியா டோர்ட்மண்ட் குழுவை 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பயர்ன். இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் 12 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தைப் பிடித்தது பயர்ன். கேன்ரி, லெவன்டோஸ்கி, முசியலா ஆகியோர் பயர்னுக்காக கோல் போட்டனர். டோர்ட்மண்ட்டிற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எம்ரி கேன் கோலாக்கினார்.

பிஎஸ்ஜி வெற்றியைக் கொண்டாடாமல் வெளியேறிய ரசிகர்கள்

பாரிஸ்: பிரெஞ்சு லீக் காற்பந்துப் பட்டத்தை 10வது முறையாக வென்றது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழு. நேற்று நடந்த லென்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தை அக்குழுவால் சமன் மட்டுமே செய்ய முடிந்தது. முதல் கோலே 68வது நிமிடத்தில்தான் விழுந்தது. அதை 88வது நிமிடத்தில் சமன் செய்தது லென்ஸ். ஆனால், பிஎஸ்ஜியின் ரசிகர்கள், இந்த வெற்றியைக் கொண்டாடாமல் ஆட்டம் முடிவதற்கு முன்பே, அரங்கத்தைவிட்டு கிளம்பத் தொடங்கிவிட்டனர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியால் மட்ரிட்டிம் தோற்று பிஎஸ்ஜி வெளியேறியதே ரசிகர்களின் கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ரியால் பெட்டிசிற்கு ஸ்பானிய கிண்ணம்

செவ்வியா: ஸ்பானிய காற்பந்துக் கிண்ணமான கோப்பா டெல் ரேவை வென்றது ரியால் பெட்ஸ் குழு. 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு, அக்குழு முதல்முறையாக இப்பட்டத்தை வென்றுள்ளது. வழக்கமான ஆட்ட நேரத்தில் இரண்டு குழுக்களும் ஆளுக்கொரு கோல் போட, 1-1 எனச் சமநிலை கண்டது. எனவே, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ‌‌ஷுட்அவுட் முறை நடத்தப்பட்டது. அதில் 5-4 என்ற கோல்கணக்கில் ரியால் பெட்டிஸ் வென்றது.